mvvenkataraman

பாரதி தெய்வீக ஜாதி!

 எட்டயபுரத்து மாமேதை,
எடுத்துக்கொண்ட தொழிலோ கவிதை,
சமுதாயம் போற்றவில்லை அதை,
கற்பூர வாசனை அறியுமோ கழுதை ?
-
யாரடா அவன் யமன் ?
எட்டி உதைப்பேன் என்றான் இவன்,
கவிதையால் கண்ட பயன்,
பயந்து நடுங்கினான் வெள்ளையன்!
-
லட்சியக்  கவிஞன் அந்த பாரதி,
அவன் நாவில் தவழ்ந்தாள் சரஸ்வதி
தைரியம் தந்தாள் அன்னை பார்வதி,
இலக்குமி இல்லாதது தலைவிதி.
 
கண்ணனை தீண்டினான் நெருப்பில்,
மயங்கினான் காக்கையின் கருப்பில்,
பணமில்லை வேட்டி மடிப்பில்,
அரிசி இல்லை சமைக்க அடுப்பில்.
 
சக்தியை கண்டான் பெண்ணிலே,
விண்ணினை கண்டால் கண்ணிலே,
உயிரினை கண்டான் பண்ணிலே,
பொன்னை காணவில்லை மண்ணிலே.
 
விரித்தது உயிர் பறவை சிறகு,
எரித்தது அவன் உடலை விறகு,
அவன் மண்ணோடு மண்ணான பிறகு,
அவனை பாராட்டுது இந்த உலகு?
 
M V Venkataraman